மதுரை: நடிகை கௌதமி ராமநாதபுரம் காவல் துறையிடம் அளித்துள்ள புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் வாங்கி தருவதாகக் கூறி, அழகப்பன் என்பவர் ரூ.3 கோடி வாங்கியிருந்தார். இந்த நிலையில், முதுகுளத்தூர் பகுதியில் உள்ள சுவாத்தான் கிராமத்தில் ரூ.57 லட்சத்திற்கு 64 ஏக்கர் நிலத்தினை வாங்கி கொடுத்தார்.
ஆனால், பிளசிங் பார்ம் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு செபி அமைப்பு தடை செய்துள்ளதை மறைத்து மோசடியாக என்னிடம் விற்பனை செய்துள்ளார். எனவே, அழகப்பனிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், அழகப்பன் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை அழகப்பன் தாக்கல் செய்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, அழகப்பனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை கௌதமி இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி நக்கீரன் முன்பு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை கௌமதி தரப்பு வழக்கறிஞர், அழகப்பனுக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் போலீசார் தரப்பில், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.
அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி நக்கீரன், ராமநாதபுரம் போலீசார் கால அவகாசம் கோரியதை ஏற்று, வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், ஜூலை 4ஆம் தேதி வரை ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால முன் ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் மூன்று குற்றவியல் திருத்தச் சட்டங்களுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!