சென்னை: நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நடிகை காயத்ரி சாய் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் தமிழக அரசின் பெயரைப் பயன்படுத்தி திரும்பப் பெறச் சொல்லி நடிகர் எஸ்.வி சேகர் தன்னை மிரட்டுவதாக, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு பாதிக்கப்பட்ட நடிகை காயத்ரி புகார் அளித்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சருக்கும், அவரது மகன் உதயநிதிக்கும் அனுப்பியுள்ள புகாரில், நடிகர் எஸ்.வி.சேகர், தன்னை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பிரபல பத்திரிகையாளர் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை வாபஸ் பெறச் சொல்லி தமிழக அரசு தன்னை நாடியதாகக் கூறி, தன்னை வற்புறுத்துவதாக அந்த புகாரில் பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக முதலமைச்சர் அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தி தன்னை தொலைபேசி வாயிலாக மிரட்டிய நடிகர் எஸ்.வி.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனது மனுவில் நடிகை காயத்ரி சாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்.வி.சேகர் தொலைபேசியில் பேசிய உரையாடலையும் நடிகை காயத்ரி சாய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சரித்திரப் பதிவேடு குற்றவாளி மீண்டும் கைது: சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தமிழ்ச்செல்வன் என்பவர் நேற்று காலை கிரீம்ஸ் சாலை வழியாக நடந்து சென்ற சிறுமியிடம் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி தன்னுடைய உறவினரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர், சிறுமியின் உறவினர்கள் மது போதையில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் வந்து விசாரித்ததாகச் சொல்லப்படுகிறது.
அதற்கு தமிழ்ச்செல்வன் அவர்களையும் ஆபாசமாகப் பேசி தாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் தமிழ்ச்செல்வனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சைபர் கிரைம் மோசடி: சென்னையைச் சேர்ந்த அசோக் ரஞ்சித் என்பவரை மும்பை சைபர் கிரைம் அலுவலகத்தில் இருந்து ஒருவர் தொடர்புகொள்வதாக பேசியுள்ளார். அப்போது, உங்களுடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, மும்பையில் இருந்து தைவான் நாட்டிற்கு பிடெக்ஸ் கொரியரில் சட்டவிரோதமாக பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதனை குற்றமாக கருதாமல் இருக்க தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த நபர் ரஞ்சித்திடம் கூறியுள்ளார். இதனையடுத்து, ரஞ்சித் 15 லட்சத்து 26 ஆயிரம் ரூபாயை அந்நபர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பின்னர், சந்தேகமடைந்த ரஞ்சித் மீண்டும் அந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது செயலிழந்து இருந்துள்ளது.
இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை ரஞ்சித் உணர்ந்துள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ரஞ்சித் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் குமார் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8.3 டன் குப்பை அழிப்பு: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு சென்னை முழுவதும் கைப்பற்றப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்புத் துறையினர், சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான 8,286 கிலோ எடை கொண்ட 8.3 டன் பொருட்களை சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் மையத்தில் ஜேசிபி வாகனம் மூலம் பிரமாண்ட பள்ளம் தோண்டி அழித்தனர்.
இதையும் படிங்க: 'தம்பி காசு எடுத்துத்தாப்பா'... ஏடிஎம் மையத்தில் ஏமாந்த முதியவர்... உஷார்..!