சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரியின் விபரங்கள் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கும் மையத்தினால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 2023-24ஆம் கல்வியாண்டில் 91 பொறியியல் கல்லூரிகளில் 680-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்துள்ளது தெரிய வந்தது.
அதேபோல் 2024-25ஆம் கல்வி ஆண்டில் 124 பொறியியல் கல்லூரிகளில் 800-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போலியாக கணக்கு காண்பித்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் வேந்தர் என்ற முறையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி, "ஒரு பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரே கல்வி ஆண்டில் பணிபுரிவதாக அங்கீகாரம் பெறுவதற்கு பெயர் அளித்திருந்தால் அதுபோன்ற கல்லூரிகள் மற்றும் பேராசிரியர் விபரங்களையும் கண்டுபிடித்து அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அதற்கான காலக்கெடு இன்று (ஆக.05) மாலையுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து கல்லூரிகள் அளித்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. மேலும், அந்த அறிக்கையின் அடிப்படையில், கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யவோ, குறிப்பிட்ட காலத்திற்கு மாணவர் சேர்க்கைக்குத் தடைவிதிக்கவோ, கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கவோ திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுமட்டும் அல்லாது, அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு பேராசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டிசுக்கு இன்று (ஆக.05) மாலைக்குள் கல்லூரிகள் அளித்த பதிலை ஆய்வு செய்து 2 நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில், அங்கீகாரம் பெறுவதற்காக அதிக அளவில் போலியாக பேராசிரியர்களின் தகவல்களைப் பதிவு செய்த கல்லூரிகளுக்கு நிரந்தரமாக அங்கீகாரத்தை ரத்து செய்யவும், தவறு செய்த கல்லூரிகளில் ஒன்றில் இருந்து மூன்று ஆண்டு வரை மாணவர்கள் சேர்க்கை அங்கீகாரத்தை ரத்து செய்யவும், கல்லூரிகளுக்கு அபராதம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளின் பேராசிரியர் நியமனங்களில் முறைகேடு தொடர்பான அறிக்கை இரண்டு நாட்களில் கல்லூரியின் விவரங்கள் அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநருக்கும் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 'நச்' பதில்!