சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்தவர் கவிக்குமார் (24). இவர் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு கறம்பக்குடி காவல் நிலையத்தில் மோசடி பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து போலீசார் இவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதற்காகத் தேடி வந்தனர். ஆனால் கவிக்குமார் போலீசில் சிக்காமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடித் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கவிக்குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். மேலும், கவிக்குமார் மீது அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டது.
இந்நிலையில் அபுதாபியிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்றிரவு(ஏப்.19) வந்தது. அதில், வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்து, வெளியில் அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
இந்த விமானத்தில், தலைமறைவாக இருந்து வந்த கவிக்குமார் சென்னைக்கு வந்தார். அப்போது குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, மோசடி வழக்கில் கடந்த 5 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருக்கும் குற்றவாளி தான் கவிக்குமார் என தெரிய வந்தது. எனவே, குடியுரிமை அதிகாரிகள் கவிக்குமாரை வெளியே அனுப்பாமல், ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு மட்டுமல்லாமல், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார், ரவிக்குமாரைக் கைது செய்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். தலைமறைவாக இருந்த குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு.. மறுவாக்குப்பதிவு உண்டா? - Lok Sabha Election 2024