வேலூர்: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தற்போது வரை நாடு முழுவதும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 'ஸ்ட்ராங் ரூம்' என்று அழைக்கப்படும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அந்த வகையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு (EVM) இயந்திரங்கள், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது வருகிற ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை, புதிய நீதிக்கட்சித் தலைவரும், வேலூர் பாஜக வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் இன்று நேரில் பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து ஏ.சி.சண்முகம் கூறியதாவது, “வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சிறப்பான முறையில் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார். பலத்த போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எளிதாக யாரும் உள்ளே செல்ல முடியாது.
வேலூரில் வெங்கட்நாராயணா கோயில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதல் தவணையாக ரூ.60 லட்சத்தை எங்களது குழுமத்தின் சார்பாக கொடுத்துள்ளோம். சென்னையில் உள்ள வெங்கட நாராயணன் கோயில் திருப்பணிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளோம். தேர்தலுக்குப் பிறகு வேலூரில் அமைக்கப்பட உள்ள திருக்கோயிலுக்கு பூமி பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது” என்றார்.
தோல்வி பயத்தில் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உளறுகிறார் என்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கூறியுள்ளது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “வருகிற 4ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தெரியும். ஆகவே, பாஜகவின் தாமரை சின்னம் வேலூரில் குறைந்தது 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்"என்றார்.
இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. "கவனமா இருங்க"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Rain Alert