சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வின் மூலம் 836 இடங்கள் நிரம்பியுள்ளது. சிறப்பு பிரிவில் உள்ள 9 ஆயிரத்து 639 இடங்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வின் மூலம் 836 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. அதில் ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி, ஜூன் 12ஆம் தேதி வரை நடந்தது. இதில் மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது. சிறப்பு பிரிவினர்களான விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22, 23ஆம் தேதிகளிலும், சிறப்பு பிரிவினர்களுக்கு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமும் நடைபெற்றது.
இந்நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் 30 ஆயிரத்து 699 மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கட் ஆப் 200 முதல் 179 வரை உள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுப் பள்ளி மணவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண் 179 வரையில் பெற்ற 1,343 மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ராணுவனத்தினரின் வாரிசுகள் பிரிவில் 149 இடங்களில் 146 இடங்களும், விளையாட்டு வீர்களுக்கான 494 இடங்களில் 409 இடங்களை தேர்வு செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான 8 ஆயிரத்து 996 இடங்களில் 281 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். தொழிற்கல்விப் பிரிவில் கட்ஆப் மதிப்பெண் 85 வரையில் பெற்ற 2 ஆயிரத்து 267 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
சிறப்பு பிரிவில் உள்ள 9 ஆயிரத்து 639 இடங்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வின் மூலம் 836 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
மேலும், முதல் கட்ட கலந்தாய்விற்கு ஜூலை 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளையும், பாடப்பிரிவையும் தேர்ந்தெடுக்கலாம். ஒரு மாணவர் அவர் விரும்பும் எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும், பாடப்பிரிவுகளையும் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப வரிசைப்படியாக பதிவு செய்யலாம்.
மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆகஸ்ட் 1 அன்று வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து, 2ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் இடத்தை உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும். அதனை ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 10 மணிக்குள் உறுதி செய்து ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது பதிவு செய்த கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர்வதற்கு விரும்புகிறேன் என்பதை தெரிவிக்க வேண்டும்.
தொடர்ந்து, ஆகஸ்ட் 3 முதல் 7ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளை உறுதி செய்து சேர வேண்டும். ஆகஸ்ட் 10ஆம் தேதி பதிவு செய்ததில் உள்ள கல்லூரியில் இடம் கிடைத்தால், கல்லூரிகளில் சேர விரும்புகிறேன் என கூறியவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு முன்னர் இடங்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களையும் www.tneaonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வின் மூலம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 102 இடங்கள் நிரப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கொலை நடக்காத நாளே தமிழகத்தில் கிடையாது.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்!