சென்னை: 2024-25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி. இ., பி. டெக் படிப்பில் இளங்கலையில் 2,33,376 இ்டங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒற்றை சாளர முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கிடையே, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கி ஜூன் 12ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10 அன்று வெளியிட்டப்பட்டது.
பொதுப் பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் விளையாட்டுப் பிரிவில் உள்ள 38 இடங்களுக்கு 282 விளையாட்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான 11 இடங்களுக்கு 11 பேரும், மாற்றுதிறனாளிகளுக்கான 664 இடங்களுக்கு 111 மாற்றுத் திறனாளிகளும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 7 பேர் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர். அவர்களில் 6 பேர் கல்லூரிகளை தேர்வு செய்து இடங்களைப் பெற்றுள்ளனர்.
விளையாட்டு வீரர்கள் பிரிவில் 262 அரசுப் பள்ளி மாணவர்கள் விருப்பங்களை பதிவு செய்ததில், 233 வீரர்கள் இடங்களை உறுதி செய்தனர். அவர்களில் 38 பேருக்கு பொறியியல் படிப்பிற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 661 இடங்கள் உள்ளன. அதில் 70 மாணவர்கள் கல்லூரியை பதிவு செய்தனர். அவர்களில் 58 பேர் இறுதி ஒதுக்கீட்டை உறுதி செய்ததில், 48 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களில் சிறப்பு பிரிவினருக்கான 710 இடங்களில் 92 இடங்களை தேர்வு செய்துள்ள நிலையில், 618 இடங்கள் காலியாக உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வில் சிறப்பு பிரிவினர்களுக்கு ஜூலை 25 முதல் 27 வரையில் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளி பிரிவில் 403 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1,220 பேரும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 2,112 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
அதேபோல, தொழிற்கல்வி பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள்.. அண்ணா பல்கலை. துணைவேந்தர் விடுத்த எச்சரிக்கை!