திருச்சி: திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வயலூரில், G ZONE அபாகஸ் மாஸ்டர்ஸ் குழுமம் சார்பில் தமிழகம் முழுவதும் அபாகஸ் பயிற்சி பெற்ற 265 மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்களது கண்களைக் கட்டிக்கொண்டு 60 நிமிடத்தில், 600 கணக்குகளுக்கு மனக்கணிதம் மூலம் தீர்வுகாணும் உலக சாதனை நிகழ்ச்சி இன்று (ஆக.26) நடைபெற்றது.
இதுவரையிலும் இந்த சாதனை உலகில் எவராலும் நிகழ்த்தப்படாத நிலையில், செபி உலக சாதனை புத்தகம் மற்றும், அகில இந்திய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற உள்ளது. சுமார் ஒரு மணி நேரம் கணிதத்தில் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் படிப்பில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திடவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என உறுதிப்பட தெரிவித்தனர்.
இது குறித்து அபாகஸ் மாஸ்டர் செல்வமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "அபாகஸ் உலக சாதனை நிகழ்வில் தமிழகம் மட்டுமில்லாமல் பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும், வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சியில், கல்வித் தரமானது ஒவ்வொரு நாளும் முன்னேறி கொண்டுதான் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் உள்ள கல்வித் தரம் வேறு மாதிரியாகவும், இன்றைய காலகட்டத்தில் உள்ள கல்வித் தரம் வேறு மாதிரியாகவும் உள்ளது.
ஆகவே, இன்றைய கல்வித் தரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக அளவில் ஞாபக சக்தி தேவைப்படுகிறது. மாணவர்களின் ஞாபக சக்திக்கு அபாகஸ் வகுப்பு ஒரு சரியான தீர்வாகவும் இருந்து வருகிறது. எனவேதான் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தின் அடிப்படியிலேயே, இந்த அபாகஸ் உலக சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், இந்த உலக சாதனை நிகழ்வில் 1 வினாடி கூட இடைவெளி இல்லாமல், மொத்தமாக 60 நிமிடம் வரை மாணவர்கள் தங்களது நியாப சக்தியை வெளிப்படுத்தும் விதமாக, கேட்கக்கூடிய 600 கணக்குகளுக்கான கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். அபாகஸ் பயிற்சி கொடுத்ததால் மட்டுமே மாணவர்கள் இதுபோன்று கணக்குகளுக்கு மனக்கணிதம் மூலம் எளிதாக பதில் அளிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சரத் கமலின் அதிரடி ஆட்டத்தால் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி!