விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் முத்துக்கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி - ஜோதி தம்பதியினர். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், பாண்டிச்செல்வி(26) என்ற பெண் திருமணமாகி, கணவரிடம் இருந்து பிரிந்து தனது அம்மா வீட்டில் 4 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். மேலும், தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வரும் பாண்டிச்செல்விக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்ற நபருடன் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து இந்த நட்பு காதலாக மாறிய நிலையில், இருவரும் தொலைபேசி மூலம் நேரத்தை செலவழித்தும், அவ்வப்போது நேரில் சந்திப்பதுமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்னர் குணசேகரன் பாண்டிச்செல்வியை சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு பாண்டிச்செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறியதை அடுத்து அவர் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக தெரியவருகிறது.
இதைத்தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 28) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பாண்டிச்செல்வி அவரது அக்கா பாண்டீஸ்வரி மற்றும் அக்கா மகளுடன் வீட்டு மொட்டை மாடியில் இருந்துள்ளார். அப்போது, இவர்களது வீட்டுக்கு வந்த குணசேகரன் அங்கிருந்த பாண்டிச்செல்வியிடம், திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், பாண்டிச்செல்வி இதற்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த குணசேகரன் தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து, பாண்டிச்செல்வி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
தீ வீடு முழுவதும் பரவியதால், வீட்டிலிருந்து பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின. மேலும், பாண்டிச்செல்விக்கு முகம் மற்றும் கைகளிலும்; பாண்டீஸ்வரிக்கு கையிலும் தீக்காயமும் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் மீட்ட உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்களை அனுமதித்தனர். தற்போது இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசார், தப்பியோடிய குணசேகரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெண்ணின் மீது தீ வைத்துவிட்டு குணசேகரன் தப்பியோடிய காட்சி அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, குணசேகரனை வலைவீசித் தேடி வருகின்றனர்.