தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் உள்ள பருவக்குடி என்ற பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் நள்ளிரவில் சிங்கம் உலா வருவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி தென்காசி மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் சிங்கம் ஒன்று பெட்ரோல் பங்க் ஒன்றின் உள்ளே நுழைய முயற்சிப்பது போலவும், அதனை பார்த்து நாய்கள் குறைப்பது போன்ற சத்தமும் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த பெட்ரோல் பங்கில் இருந்த கார் ஒன்றில் ஆட்கள் இருபது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் திடீரென தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்.. வியந்து பார்த்த கிராம மக்கள்!
இந்த நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அதில், "சிங்கமானது தமிழகத்தில் இல்லை எனவும், சங்கரன்கோவில் அருகே உள்ள பருவக்குடி பகுதியில் இந்த வீடியோ பதிவிடப்படவில்லை எனவும், ஏனெனில் அந்த பெட்ரோல் பங்கில் உள்ள விளம்பர பலகைகளில் வடமொழி எழுத்துக்கள் உள்ளதால் அது நிச்சயமாக தமிழகத்தில் எடுக்கப்பட்டது இல்லை" எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், "பொதுமக்கள் இதுதொடர்பாக எந்த விதமான அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும், இதுபோன்ற வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்