சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயலட்சுமி. இவர் வழக்கம் போல் நேற்று இரவு பணியை முடித்து விட்டு, அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசு வாகனத்தில் மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது காரை காவலர் பாண்டியன் ஓட்டியுள்ளார். இந்த நிலையில், கார் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் பின்புறம் உள்ள டயர் முழுவதுமாக கழன்றுள்ளது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் சிறிது தூரம் சென்று நின்றுள்ளது.
அதிர்ஷ்டவசமாக கார் ஓட்டுநர் மற்றும் காவல் ஆய்வாளர் எந்த ஒரு காயமும் இன்றி உயிர் தப்பினர். இதையடுத்து, காரில் இருந்து இறங்கி இருவரும் விபத்துக்குள்ளான காரை வீடியோவாக பதிவு செய்தனர். அப்போது காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, ''கார் டயர் கழன்று எவ்வளோ தூரம் கார் வந்து நிற்கிறது பாருங்க... கடவுள் புண்ணியத்தில் உயிர் பிழைத்துள்ளோம்'' என கூறியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், காவல்துறையில் கொடுக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களை அரசு பழுது பார்த்து சரி செய்து கொடுக்க வேண்டும் எனவும் சக காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவ்விபத்து குறித்து பெண் இன்ஸ்பெக்டர் எடுத்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஹலோ.. வீட்டுல யாராவது இருக்கீங்களா" - கதவை உடைத்துக்கொண்டு நுழைந்த யானை!