தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 5ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர், நேற்று மதியம் 12 மணி அளிவில் காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, அந்த சிறுவனை ஒரு இளைஞர் அழைத்துச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து பெற்றோர் சிறுவனை அன்று மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுவனின் பெற்றோர், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு இளைஞர், அந்த சிறுவனை அழைத்து சென்றதும், மீண்டும் அந்த இளைஞர் மட்டும் வருவதும் பதிவாகி உள்ளது.
இதையடுத்து, அந்த இளைஞரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த இளைஞர் 12ஆம் வகுப்பு படித்து வருவதும், சிறுவனுக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க, அந்த சிறுவனை கிணற்றில் தள்ளி விட்டதும் தெரிய வந்துள்ளது.
இதனை அறிந்த காவல் துறையினர், உடனடியாக தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு, சிறுவனின் உடலை சடலமாக மீட்டுள்ளனர். பின்னர், உடற்கூறு ஆய்விற்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவனை கிணற்றில் தள்ளி விட்ட இளைஞர் முழு நேரமும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு சொடுத்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் மற்றும் கொலை வழக்கு என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்த சிறுவனின் உறவினர்கள், காவல் துறையினரிடம் உடனடியாக குற்றம் செய்த நபருக்கு தகுந்த தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையின் பேச்சு வார்த்தைக்கு பிறகு சிறுவனின் உடலை கைப்பற்றி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாடகரும், சிறுவனின் உறவினருமான மூக்குத்தி முருகன் கூறுகையில், "சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த அந்த இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சரிடமும், காவல்துறையிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு நடவடிக்கை கடுமையாக இருக்க வேண்டும். மேலும், அந்த இளைஞர் கஞ்சா பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதனால் போதைப்பொருளின் நடமாட்டத்தையும் தமிழக அரசு தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான குடோனில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை!