கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே மைலேரிபாளையத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ள. இந்த கல்லூரியில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (19) என்பவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றார்.
இந்த நிலையில், இவர் நேற்று (அக்.29) மாலை அவர் தங்கியிருந்த மாணவர் விடுதியின் 4வது மாடியில் இருந்து திடீரென குதித்துள்ளார். இதில் கை, கால்களில் எலும்பு ஏற்பட்டு பலத்த காயத்துடன் இருந்த அவரை சக மாணவர்களும் விடுதி நிர்வாகத்தினரும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவர் பிரபு பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும், தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக கற்பனையில் இருந்து வந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை: 10 மாதங்களாக நீதிக்காக அலையும் சிறுமியின் தந்தை.. மதுரை அதிர்ச்சி சம்பவம்!
மேலும், எந்த கட்டிடத்தில் இருந்தும் குதிக்க முடியும் என்று தனது நண்பர்களிடம் அடிக்கடி பேசி வந்ததாகவும், அதன் அடிப்படையில் நேற்று (அக்.29) மாலை விடுதியின் 4வது மாடியில் இருந்து குதித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதுமட்டும் அல்லாது, பக்கத்து மாடிக்கு தாவுவதாகக் கூறி குதித்த பிரபு தரையில் விழுந்து பலத்த காயம் அடைத்து இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து செட்டிபாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, கல்லூரி மாணவர்கள் விடுதியின் 4வது மாடியில் இருந்து அவர் குதிக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்