சென்னை: இணையதளம் வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் பொதுமக்கள் வழங்கும் சுயசான்றிதழ் அடிப்படையில் உடனடி கட்டட திட்ட அனுமதி பெறும் திட்டத்தை தமிழக அரசு கடந்த ஜூலை 22ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவுப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இது குறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஹென்றி ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "2 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவு உள்ள மனையில், 3 ஆயிரத்து 500 சதுர அடி வரை (2 அலகு) தரைத்தளம் மற்றும் முதல் தளம் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு இணையதளம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் பொதுமக்கள் வழங்கும் சுயசான்றிதழ்களின் அடிப்படையில், உடனடி கட்டட திட்ட அனுமதி பெறும் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களைத் தவிர்த்து, வேறு எந்த விதமான வீண் விரயங்களும் பொதுமக்களுக்கு ஏற்படாது.
உரிய கால நேரத்துடன் எல்லோரும் எளிய முறையில் அனுமதி பெற முடியும். இது குறித்து பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படும். இதன் மூலம் வரும் காலங்களில் அனுமதியற்ற கட்டிடங்கள் உருவாகாமல் இருக்கும். சிறப்பான திட்டமாக இருந்தாலும், அரசு இதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது.
நகர்புறங்களில் மட்டும் இதனை தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் என்ற வகையிலும், 10 மீட்டர் உயரம் வரை அனுமதித்து, இரண்டு அலகுக்கு பதிலாக நான்கு அலகுகள் வரை அனுமதி பெறும் வகையில் அளவுகோளினை மாற்றியமைத்தால், நகரப் பகுதிகளில் வீடு கட்டும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்புக்குரிய திட்டமாக இது அமையும்" என தெரிவித்தார்.
கையூட்டு தடுக்கப்படுமா? இதனிடையே, தமிழக அரசு ஆன்லைன் மூலம் ஒற்றைச் சாளர முறையில் உடனடியாக கட்டட அனுமதி பெறுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ள இந்த புதிய அணுகுமுறை பல்வேறு தரப்பில் வரவேற்பு பெற்றாலும், அதில் உள்ள குறைகளை மதுரையைச் சேர்ந்த சில கட்டுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அந்த வகையில், மதுரையில் கடந்த 25 ஆண்டுகளாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் சங்கர பாண்டியன் இது குறித்து கூறுகையில், "கட்டட அனுமதிக்கு தற்போது அறிவித்துள்ள இந்த முறை வரவேற்கத்தக்கது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை நடைபெறும் வகையில் முழுமையான மாற்றம் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைகின்ற அலைச்சல் பொதுமக்களுக்கு மிச்சமாகிறது. ஆனால், ஆன்லைன் முறையிலும் கூட அதிகாரிகள் கையூட்டு பெறுவது வெவ்வேறு வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோன்று இந்த கட்டிட வரைபட அனுமதியிலும் அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தவறுகள் செய்ய அதிக வாய்ப்புண்டு.
கடந்த காலங்களில் இது போன்ற அனுமதிக்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. தற்போது இந்த அறிவிப்பு அது போன்ற நிலையை தவிர்க்கச் செய்யும். இருப்பினும், இன்னும் நுணுக்கமாக ஆய்வு செய்து இந்த ஆன்லைன் முறையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.
கூடுதல் அலைச்சல்தானா? அதேபோல், மதுரையைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் பக்ருதீன் இத்திட்டம் குறித்து கூறுகையில், "கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி உடனுக்குடன் வழங்கும் வகையில் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் மூலம் 20 நிமிடங்களில் அனுமதி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கட்டிடப் பொறியாளர்கள் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது, தற்போது பயனாளிகளே நேரடியாக விண்ணப்பிக்கலாம் எனக் கூறியிருக்கிறார்கள். பொறியாளர்கள் விண்ணப்பிக்கும் போது, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலாளருக்கு இரண்டு முறை கடவு எண் (ஓடிபி) வரும். முதலில் நாம் விண்ணப்பித்து பணம் கட்டியவுடன் ஒரு கடவு எண்ணும், அதற்குப் பிறகு அனுமதிக்கான கடவு எண்ணும் வருவது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போதைய முறை மூலம் விண்ணப்பதாரர்களின் நேரடியாக விண்ணப்பிக்கும் போது, அதற்கான தேவை தானாகவே நிகழ்வது போன்று ஏற்பாடு செய்துள்ளனர். ஒரு ஊராட்சி நான்கு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் கடைசி தொகுதியில் சதுர அடிக்கு ரூபாய் 15 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
22 ரூபாயிலிருந்து 15 ஆக மிக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த வரைபட அனுமதி மூலமாக வருமானம் பெறும் வகையில், கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள உரிமை இருக்கின்ற காரணத்தால், சதுர அடிக்கு ரூ.8, 10, 12, 15 என முடிவு செய்து வைத்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் பொறியாளர் விண்ணப்பிக்கும் போது ஏற்கனவே ஊராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் என்னவோ அதைப் பொறுத்து, அவர் தொகையை முடிவு செய்து விண்ணப்பிப்பார். தற்போது, அரசு நான்கு விதமாக பிரித்து வைத்து இருக்கின்ற காரணத்தால் இதற்கான கட்டண உயர்வு பயனாளிகளின் தலையில் விழும்.
ஆனால், மாறாக கட்டணம் குறையும் என்று கூறுகிறார்கள், அது உண்மை இல்லை. சராசரியாக ஒவ்வொரு ஊராட்சிகளும் சதுர அடிக்கு ரூ.10 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 800 சதுர அடியில் வீடு கட்டும் நபருக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை இதன் மூலம் செலவு அதிகரிக்கிறது.
மேலும், பொறியாளர் வரைபடத்தை தாங்களே தரவேற்றம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். ஆனால், பொறியாளர் கையொப்பமிட்ட வரைபடத்தை அவரிடம் இருந்து பெற்று பிடிஎப் (pdf) கோப்பாக தரவேற்றம் செய்ய வேண்டும். இதில் பொறியாளருக்கு கொடுக்க வேண்டிய கட்டணம் எந்த விதத்திலும் குறைய போவதில்லை.
பொறியாளர் செய்ய வேண்டிய பணிகளை பயனாளிகள் நேரடியாகச் செய்வதால் அவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும், தொழில்நுட்பச் சிக்கலையும் எதிர்கொள்ள நேரிடும். பயனாளிகள் நேரடியாக விண்ணப்பிப்பது வாயிலாக கூர் ஆய்வு கட்டணம் தேவையில்லை. ஆனால், மற்ற வகையில் அவர்களிடம் இருந்து பணம் மறைமுகமாக பெறப்படுகிறது.
இந்த புதிய முறையின் மூலம் அந்த கட்டணச் சுமையும் பயனாளர்களின் தலையில் தான் விழுகிறது. எந்த அலுவலகத்திற்கும் பயனாளிகள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என இந்த புதிய முறையின் மூலம் கூறப்படுகிறது, அதுவும் உண்மை அல்ல. தாங்களாக வரைபடத்தை தரவேற்றினாலும், பொறியாளர் அலுவலகம் சென்று அப்படங்களைப் பெற்று, அதனை ஸ்கேன் செய்து இணைய வழியாக அனுப்புவது என்பது பயனாளிகளுக்கு கூடுதல் அலைச்சலையே ஏற்படுத்தும்" என குற்றம் சாட்டினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!