சென்னை: புதுச்சேரி இளைஞர் உடல் எடை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, உயிரிழந்த விவகாரத்தில் இரண்டாவது முறையாக இன்று (ஏப்.29) சுகாதாரத்துறை இணை இயக்குனர், தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாண்டிச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் (26) என்பவர் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். சிகிச்சையின் போது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதால், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர், அளித்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக, விசாரணை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்கும் படி உத்தரவிடப்பட்டது.
அந்த உத்தரவின் பெயரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பல்லாவரம் பம்மல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் இருவர் தலைமையில் மருத்துவக் குழுவினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து எழுத்துப்பூர்வமாக விளக்கங்களை வாங்கிச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாகச் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் சென்னை சுகாதாரத்துறை இணை இயக்குனர் தீர்த்த லிங்கம் தலைமையில், ஹேமச்சந்திரனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை என்ன, என்ன மருந்து முறைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விரிவான விசாரணை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவக் குழுவினர் தனியார் மருத்துவமனையில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.