கரூர்: கடந்த 2012-ஆம் ஆண்டு அக்.30-ஆம் தேதி ராமநாதபுரம் பசும்பொன்னில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவின் போது, மதுரை சிலைமான் அருகே உள்ள புளியங்குளத்தைச் சேர்ந்த 20 பேர் சென்ற வேன், அருப்புக்கோட்டை வழியாக மதுரை ரிங் ரோடு அருகே வந்தபோது, வேன் மீது சரமாரியாகக் கற்களை வீசி, பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஒரு கும்பல் தப்பி ஓடியது.
அப்போது அந்த வேனில் இருந்த 20 பேர் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், புளியங்குலத்தைச் சேர்ந்த ஜெயபாண்டி மகன் சுந்தரபாண்டி, ராஜா மகன் வெற்றிவேல் மற்றும் தேசிங்கு ராஜா, ரஞ்சித் குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனை அடுத்து, மதுரை அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக, மதுரை மேல அனுப்பானடி அரசமகாராஜா மகன் ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன் (36), மணிகண்டன் என்கிற பங்க் மணி (37), கார்த்தி என்கிற காளி கார்த்திக் (36), முத்துவிஜி என்கிற ஊமை (22), சந்திரசேகர் என்கிற மூலக்கரை (31), சோனையா (31) நாகராஜ் என்கிற சோப்பு நாகராஜ் (31) முத்துக் கருப்பன் என்கிற வெள்ளை கோரத்தான் (31) மோகன் (38) விக்னேஷ் என்கிற விக்கி(33) மற்றும் சந்தோஷ் என்கிற சந்தோஷம்(33) என மொத்தம் 11 பேர் மீதி குற்றம் சாட்டப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில், கடந்த 2017-ஆம் ஆண்டு கரூர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று (பிப்.19) காலை 10 மணியளவில் விசாரணைக்கு ஆஜராக முதல் குற்றவாளியான ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன், அவரது நண்பர் கார்த்தி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வருகைதந்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே சென்ற பொழுது ராமர் பாண்டி சென்ற இருசக்கர வாகனத்தை காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தி, ராமர் பாண்டியின் முகத்தை சரமாரியாக வெட்டி சிதைத்து விட்டுத் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதில் உடன் சென்ற, கார்த்திக் (26) என்பவர் எட்டு காயங்களுடன் மீட்கப்பட்டு, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மேலும், சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி போலீசார் ராமர் பாண்டியின் உடலைக் கைப்பற்றி, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், மதுரைச் சேர்ந்த பிரபல ரவுடி கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு திரும்பிய போது, வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்; நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம்..!