சென்னை: வட சென்னை திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நகர் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு சுமார் 3 அடுக்கு தளத்துடன் கூடிய வீடு ஒன்று உள்ளது. இதில் இரண்டாவது தளத்தில், திடீரென பிரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவால் வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
உடனடியாக, முருகன் தனது குடும்பத்தினருடன் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார். மேலும், உடனடியாக திருவொற்றியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை விரைவாக அணைத்தனர். தீ அணைந்தாலும் சுற்றி கரும்புகை மூட்டமாகவே காணப்பட்டது.
மேலும், தீப்பற்றி வீடு எரிந்ததால் மற்ற பொருட்களுக்கும் பரவி டிவி, சோபா போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இந்நிலையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் மின்வாரிய அதிகாரிகள் இந்த பகுதிக்கு மின் இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
குளிர்சாதனப்பெட்டியின் பங்கு என்ன? குளிர்சாதனப்பெட்டி என்பது வீட்டில் ஒரு அடிப்படை பொருள் போல் ஆகிவிட்டது. திருமணம் செய்து கொடுக்கையில் சீதனத்தில் முக்கிய பொருளாக குளிர்சாதனப்பெட்டி ( fridge) இருக்கிறது. குளிர்பானங்கள், பால், காய்கறிகள் உள்ளிட்டவைகளை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.
இன்றியாமையாத பொருளாக மாறிவிட்ட குளிர்சாதனப்பெட்டியை முறையாக பயன்படுத்தாமல் விடுவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. குளிர்சாதனப்பெட்டி வெடித்து நடைபெற்ற விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பிரிட்ஜ் விபத்துக்கான காரணம் என்ன? இந்நிலையில், நாள்தோறும் இடைவிடாமல் ஓடும் குளிர்சாதனப்பெட்டியை வெடிக்காமல் எப்படி பார்த்துக்கொள்வது என்பது குறித்து கொடுங்கையூரைச் சேர்ந்த குளிர்சாதனப்பெட்டி மெக்கானிக் ரியாஸ் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “உங்கள் குளிர்சாதனப்பெட்டி வெடிப்பதற்கு முக்கிய காரணம், அதன் கம்ப்ரசர்- இது யூனிட்டின் பின்புறத்தில் அமைந்துள்ளது.
இது ஒரு பம்ப் மற்றும் மோட்டாரைக் கொண்டுள்ளது. இது குளிர்பதன வாயுவை அதன் (சுருள்) பைப்புகள் வழியாகத் தள்ளுகிறது. இந்த வாயு குளிர்ந்து திரவமாக மாறும்போது, குளிர்சாதனப்பெட்டியில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி, உள்ளே இருக்கும் அனைத்து பொருட்களையும் குளிர்விக்க உதவுகிறது.
ஆனால் சில நேரங்களில், குளிர்பதனமானது அழுத்தத்திற்கு உள்ளாகி நகரும் போது, குளிர்சாதனப்பெட்டியின் பின்புறம் மிகவும் சூடாகலாம். இது நிகழும்போது, அது மின்தேக்கி சுருள்களை (Pipe) சுருங்கச் செய்கிறது. இது வாயுவை வெளியேற்றுவதைத் தடுக்கிறது. அழுத்தப்பட்ட சுருளுக்குள் அதிக வாயு குவிவதால், காலப்போக்கில் அழுத்தம் ஆபத்தான வெடிப்பை ஏற்படுத்துகிறது. குளிர்சாதனப்பெட்டியின் பின்புறம் காற்றோட்டமாக இருக்கும் வகையில் அரை அடியாவது காலியாக இருக்க வேண்டும்.
காற்றோட்டமாக இருக்கையில் கம்ப்ரசர் சூடாகமால் தடுக்க முடியும். குளிர்சாதனப்பெட்டியிலிருத்து (Fridge) தண்ணீர் வெளியேறும் பகுதி அடைப்பு உள்ளதா, சரியாக தண்ணீர் வெளியேறுகிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது ஃபிரீசரில் உள்ள பனிக்கட்டியை குளிர்சாதனப்பெட்டியை ஆஃப் செய்து நீரை வெளியேற்ற வேண்டும்.
மின் துண்டிப்பு ஏற்படும் போதும், பிரிட்ஜ் ஆஃப் செய்த போதும் நீர் வெளியேறும் பகுதியை சோதனை செய்வது நல்லது. நீர் வெளியேறி கம்ப்ரசர் மீது விழும் வகையில் விட்டுவிடக்கூடாது. இதனால் wire short circuit ஆக வாய்ப்புள்ளது. வெளியூர்களுக்குச் செல்லும் பணி இருந்தால், குளிர்சாதனப்பெட்டியில் உள்ள பொருட்களை எடுத்துவிட்டு ஆஃப் செய்துவிட்டு செல்வது சிறந்தது.
மின்னழுத்தம் ஏற்ற இறக்கங்களை தடுக்கும் வகையில் ஸ்டெபிலைசர் பயன்படுத்த வேண்டும். வீட்டை காலி செய்கையில், குளிர்சாதனப்பெட்டியை வாகனத்தில் ஏற்றுவது இறக்குவது செய்வதால், ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு குளிர்சாதனப்பெட்டி நகர்த்துகையில், 8 மணி நேரத்திலிருந்து 24 மணி நேரம் வரை அதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
ஏனெனில், கம்ப்ரசரில் உள்ள வாயுவானது ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். இதனால் குளிர்சாதனப்பெட்டியை ஒரு இடத்தில் வைத்துவிட்டால், அந்த வாயு மெல்ல மெல்ல கம்ப்ரசில் வந்து அடைந்துவிடும். எனவே, குளிர்சாதனப்பெட்டியை சரியாக பயன்படுத்தினால் எவ்வித பிரச்னையும் இல்லை எனக் கூறினார்.
இதையும் படிங்க: நின்று கொண்டிருந்த கார் மீது சரக்கு லாரி மோதல்.. கொடைக்கானல் சாலையில் உயர்தப்பிய பயணிகள்! - Kodaikanal Lorry Car Accident