சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதியை தாக்கிய சிறைக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த ரோஷன் சல்மா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், விசாரணைக் கைதியாக கடந்த நான்கு ஆண்டுகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் முகமது ரிப்பாஸ்-ஐ சிறைக் காவலர்களாக உள்ள கண்ணன், சதீஷ் மற்றும் முரளி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனது கணவரை காவலர்கள் ஷூ கால்களால் சரமாரியாகத் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறைக் காவலர்கள் தாக்கியதில், முகமது ரிப்பாஸ் பலத்த காயமடைந்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். தற்போது தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், சிறைக் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் எஸ்.நதியா முறையிட்டார். முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திங்கட்கிழமை (மார்ச் 25) விசாரிப்பதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "திமுகவினரே திமுகவிற்கு ஓட்டு போட தயாராக இல்லை" - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு! - ADMK Ex Minister SP Velumani