கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் போதை வஸ்துக்களின் பயன்பாட்டைத் தடுக்கும் விதமாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமட்டும் அல்லாது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், பான் மசாலா மற்றும் குட்கா விற்பனை செய்யும் பழைய குற்றவாளிகளை போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமாருக்கு, பொள்ளாச்சி நகர்ப் பகுதியில் போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து, பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தனிப்படை அமைத்து போலீசார் போதை ஊசி விற்பனையில் ஈடுபடும் நபரை தீவிரமாக தேடிவந்துள்ளனர்.
இந்த சூழலில், பொள்ளாச்சி நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேச காலனி பகுதியில் போதை ஊசி மற்றும் குப்பிகள் விற்பனை செய்து வருவது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, மாறுவேடத்தில் சென்ற போலீசார் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.
போலீசாரின் இந்த விசாரணையின் பொழுது, போதை ஊசி விற்பனையில் ஈடுபட்ட நபர் சூளேஸ்வரன் பட்டி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பதும், இவர் போதை ஊசி மற்றும் அதற்கான குப்பிகள் ஆகியவற்றைக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து வாங்கி வந்து, இங்கு பொள்ளாச்சி பகுதிகளில் இருசக்கர வாகனத்தின் மூலம் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது.
இதை அடுத்து, அவர் வைத்திருந்த போதை ஊசிகள் மற்றும் அதற்கான 300 குப்பிகளை பறிமுதல் செய்த போலீசார் பாஸ்கரனை கைது செய்து அவருடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாஸ்கரன் மீது பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் போதை ஊசி பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாங்குநேரியில் மீண்டும் ஒரு ஜாதிய மோதல்..! காவல்துறையினர் கூறுவது என்ன?