சென்னை: கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று காலை மருத்துவமனையில் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி என்பவர் பணியில் இருந்த நேரத்தில், அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கினார்.
இதனைக் கண்ட பொதுமக்களும், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கிண்டி காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி காவல்துறையினர், மருத்துவரை கத்தியால் குத்திய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். மருத்துவமனை வளாகத்தில் கிடந்த மருத்துவரை குத்திய கத்தியையும் போலீசார் மீட்டுள்ளனர்.
தற்போது அந்த நபரை காவல்துறை கைதுசெய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து விக்னேஷ் போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தை பெயர் வெளியிட விரும்பாத காவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம்: "இளைஞர் மீது உரிய நடவடிக்கை" - உதயநிதி ஸ்டாலின் உறுதி!
அவர் கூறியதாவது, "முதற்கட்ட விசாரணையில் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் தான் மருத்துவரைக் கத்தியால் குத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. இவரது தாயார் கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் சில மாதகாலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரன் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபரிடம் அலட்சியமாக பதில் அளித்ததால், ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் குத்தியதாக விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்.
மருத்துவரைக் கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டிலிருந்தே கத்தி எடுத்து வந்தேன். தாயார் வலியால் துடித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவரை குத்தினேன். ஹீமோ சிகிச்சை, அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன் என விக்னேஷ் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்