திண்டுக்கல்: 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்பது நம் முன்னோர்கள் காலகட்டத்தில் இருந்து நாம் கடைப்பிடித்து வரும் ஒன்றாகும். நமது உடல் ஆரோக்கியத்திற்கு அச்சாணியே, வாழ்க்கையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் தான். நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே நமது வாழ்க்கை ஆரோக்கியமாக உள்ளதா? இல்லையா என அறிந்து கொள்ளலாம்.
அந்த வகையில், திண்டுக்கல்லில் ஆரோக்கிய வாழ்க்கையை கடைப்பிடித்து வந்த மூதாட்டி, தற்போது தனது 106வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி, மகன், மகள்கள், மருமக்கள், கொள்ளுப்பேரன், எள்ளுப் பேரன்கள் என சுமார் 5 தலைமுறைகளுக்கு ஆசி வழங்கிய அதிசய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராப்பட்டி ஊராட்சி அம்மாபட்டியில் வசித்து வருபவர் துரைசாமி என்பவரின் மனைவி மூக்காயி (106). இவரது கணவர் விவசாய வேலை செய்து வந்த நிலையில், கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 5 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 3 மகன்கள் இறந்து விட்டனர்.
தற்போது மகன், மகள் வழியாக 27 பேரன் பேத்திகள், 33 கொள்ளுப்பேரன் பேத்திகள் என தொடர்ந்து 5வது தலைமுறை வாரிசுகளான 18 எள்ளுப் பேரன் பேத்திகளுமாக மொத்தம் 82 உறுப்பினர்கள் கொண்ட குடும்பமாக வாழ்ந்து வருகிறார் மூக்காயி என்ற மூதாட்டி. தன்னுடைய 78 ஆவது வயதில் கணவரை இழந்த மூக்காயி, தினசரி உணவில் கீரை வகைகள், நாட்டுச் சுண்டைக்காய் உள்ளிட்ட பச்சைக் காய்கறிகளை மட்டுமே உண்டு வந்துள்ளார்.
அதனால், மூக்காயி இதுவரை உடல் நலக் குறைவு என மருத்துவமனைக்கே சென்றதில்லை எனவும், வயது முதிர்வின் காரணமாகச் சிறிதளவு காது கேட்கும் குறைபாடு மட்டும் உள்ளதாகவும், இருந்தாலும் தற்போது வரை கண் பார்வை நன்றாக உள்ளதாகவும் அக்குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது மூதாட்டியின் 106வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, திருமணமாகி பல்வேறு ஊர்களில் வசிக்கும் மகன், மகள்கள், பேரன் பேத்திகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து, கேக் வெட்டி மூதாட்டிக்கு ஊட்டி விட்டும், காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றும் மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி, 5 தலைமுறைகள் கண்ட மூதாட்டியின் பிறந்தநாளை தாங்கள் ஒரு திருமண விழா போல் கொண்டாடுவதாகவும், அவரின் பேரன் பேத்திகள் தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்