புதுக்கோட்டை: விசில் அடித்தால் கூட்டம் கூட்டமாக ஓடிவரும் நாய்களுக்கு கோழிக்கறி முதல் பிஸ்கர் என தினசரி உணவளித்து வருகிறார், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் நாகராஜன். திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர் இவர் கடந்த 35 வருடங்களாக புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், ஆயுதப்படை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரிந்து வந்துள்ளார்.
தற்போது புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், அவர்கள் பல வருடங்களுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து வெளியூர் சென்று விட்டதாக கூறினர். இதனால் தான் பணிபுரியும் இடத்திலேயே தங்கி வேலை செய்து வருகிறார்.
தனது தினசரி வருமானத்தில் பெருமளவு நாய்களுக்காகச் செலவழிக்கும் நாகராஜன், “தினமும் 500, 600 ரூபாய் கிடைக்கும். அதை வைத்து தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு கோழிக்கறி, பிஸ்கட் என நாய்கள் சாப்பிடும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பேன்” என ஈடிவி பாரத்திடம் கூறியவரிடம் உங்களுக்கான வாழ்வாதாரம் என்ற கேள்வியை முன்வைத்தபோது, “அரை சாப்பாடு வாங்கி அதனை இருமுறை சாப்பிடுவேன். கொஞ்சம் மட்டுமே நான் சாப்பிடுவேன்” என வியக்க வைக்கும் பதில் ஒன்றை அளித்தார்.
இதையும் படிங்க: வளர்ப்பு நாய் கடித்து சிறுமி காயம்..சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!
ஆனால், ஒவ்வொரு பகுதியாக நாய்களுக்கு உணவளிக்கும் பொழுது பலர் தன்னை திட்டுவதாகவும், ஒரு சிலர் நாய்களை துரத்தி அடித்து விடுகிறார்கள் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். காரணம், “நமக்கு பசித்தால் யாரிடமாவது கேட்டு வாங்கி சாப்பிடுவோம். ஆனால் நாய்கள் தங்களுக்கு பசிக்கிறது என்று சொல்வதற்கு வழியில்லை. அதனால் இது போன்று தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவு வழங்குவதை தொடர்ந்து வழங்கி வருகிறேன்” என்றார்.
மேலும், தெருவில் அனாதையாகவும், விபத்திலும் செத்துக் கிடந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களை புதைத்தாக கூறும் நாகராஜன், இதுவரை 40க்கும் மேற்பட்ட நாய்கள் தன்னை கடித்ததாகவும் கூறி நம்மை வியக்க வைத்துள்ளார். இருப்பினும், “ஒரு நாள் கூட தவறாமல் நாய்களுக்கு உணவளித்து வருகிறேன். நான் அவைகளுக்கு உணவளிக்கும் வரை அவை எனக்காக காத்திருக்கும். அவ்வாறு ஒரு நாள் அல்ல, ஒரு வேளை உணவளிக்கவில்லை என்றாலும் எனக்கு தூக்கம் வராது” என தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், தனக்கு குடும்பங்கள் இல்லை, அதனால் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் தான் தன்னுடைய குடும்பம் என தெரிவித்த நாகராஜன், “இதில் கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைப்பதில்லை. இதனை மற்றவர்களிடம் கூறினால், அதனை யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே முயன்றவரை வாயில்லாத ஜீவன்களுக்கு நம்மால் முடிந்தவற்றைச் செய்ய வேண்டும்” என அவர் ஈடிவி பாரத் வாயிலாக கேட்டுக் கொண்டார்.