சென்னை: மயிலாப்பூரில் நேற்றிரவு (ஏப்.2) சாய்பாபா கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடமிருந்து ரூ.1.50 கோடி பணத்தை மர்ம நபர்கள் வழிப்பறி செய்து விட்டதாகச் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகவும், இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், தனியார்ப் பள்ளிக்குச் சொந்தமான ரூ.1.50 கோடி பணத்தைப் பள்ளியின் உரிமையாளரிடம் கொடுப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது தன்னை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் தன்னிடமிருந்து ரூ.2 லட்சம் பணத்தை மட்டும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றதாகப் பாதிக்கப்பட்ட பள்ளி மேலாளர் வினோத் குமார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, காவல் கட்டுப்பாட்டறைக்குத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட வினோத்குமார் ரூ. 1.50 கோடி பணத்தை வழிப்பறி செய்து விட்டதாகத் தெரிவித்த நிலையில், தற்போது புகாரில் ரூ.2 லட்சம் பணத்தை மட்டும் பறித்துக் கொண்டு தப்பித்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். இதனால் இந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்.. பொதுமக்களுக்கு வனத்துறை கூறும் அறிவுரை என்ன? - Jaguar Movement In Mayiladuthurai