சென்னை: அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்தவர் வில்சன்(35). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் திருவேற்காடு அடுத்த பெருமாளாகரம் பகுதியில் இறந்து போனதால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவியுடன் வந்துள்ளார். குடிபோதையில் வந்த வில்சன் அங்கு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் அவரது மனைவியை அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்த அவரது உறவினர்கள் வில்சனை தாக்கியுள்ளனர். இதனால் வில்சன், துக்க வீட்டுக்கு வந்த தனக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி ஆத்திரமடைந்து, அந்த பகுதியில் வீட்டின் மீது அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் மீது ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியுள்ளார்.
மேலும், தன்னை அடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, டவரின் உச்சியில் நின்றுகொன்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து திருவேற்காடு போலீஸ் மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, டவர் மீது ஏறிய வில்சனை கீழே இறங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அந்த நபர் கீழே இறங்க மறுத்ததால், அவரது உறவினர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து வில்சனை அடித்த நபரை போலீசார் வேனில் ஏற்றிக்கொண்டு அந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியதையடுத்து, வில்சன் செல்போன் டவர் மேல் இருந்து கீழே இறங்கி வந்தார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, இது குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்வியை காவிமயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சியளிக்கிறது: விசிக எம்பி ரவிக்குமார்