சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் ரமேஷ் என்பவர் குடிபோதையில் கீழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வழியாக வந்த காவலர் சதாம் உசேன் ரமேஷை தூக்கிவிட்டு, இதுகுறித்து அவரது மனைவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். குடிபோதையில் இருந்த ரமேஷ், ஏன் என் மனைவியிடம் கூறினாய் எனக் கேட்டு காவலர் சதாம் உசேனின் சட்டையைக் கிழித்து தாக்கியுள்ளார்.
பின்னர், காவலர் மீது தாக்குதல் நடத்திய ரமேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காவலாளியிடம் திருச்சியைச் சேர்ந்த மணி ராஜா என்பவர் தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவலர் சுபாஷ், மணிராஜாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென காவலர் சுபாஷின் கையை மணி ராஜா கடித்து தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர் காவலரை தாக்கிய மணிராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
நகை திருட்டு: சென்னை சைதாப்பேட்டையில் தனியார் கல்லூரி கணிதப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி. இவர் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்ற போது, 20 சவரன் நகை திருடு போய்யுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப தெருவில் வசித்து வருபவர் விவேக். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், விவேக் பணிக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, விவேக் காவல்துறையினருக்கு புகார் அளித்த நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவற்றை போலவே, சென்னை ஓட்டேரியில் காவலர் வீட்டியலேயே நகை திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக, இரவு கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் விஜயலட்சுமி இல்லத்திலிருந்து 4 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.