சென்னை: வெளியூர்களிலிருந்து வேலைத் தேடி சென்னைக்கு வரும் அப்பாவி பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவது காவல்துறைக்குத் தெரியவந்துள்ளது.
அந்த கும்பல்களைப் பிடிக்க விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் ரோந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு இடைத்தரகர்கள் மூலம் மோசடி கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நீலாங்கரை, கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தியபோது, வினோத் என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததை உறுதி செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து இரு செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட மூன்று பெண்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வடபழனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஆபாச சீண்டல்.. சென்னை பெண் மென்பொறியாளர் புகாரில் ஒருவர் கைது!