ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் காடி தெருவைச் சேர்ந்தவர் முகமது அஷ்வாக், ஆம்பூரில் உள்ள 20க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை பெற்றுக் கொண்டு தனியார் நிதி நிறுவனத்தில் கூலி தொழிலாளிகளின் ஆவணங்களை வைத்து 44 ஏசிகளை வாங்கியுள்ளார்.
அதேபோல் முகமது அஷ்வாக், ஆம்பூரை சேர்ந்த தாசிம் என்பவரின் ஆதார் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக்கை வைத்து ஏசி வாங்கி பணம் செலுத்தாமல் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் தாசிமை தனியார் நிதி நிறுவனத்தினர், ஏசி வாங்கியதற்காகப் பணத்தைச் செலுத்தக்கோரித் தொடர்ந்து கூறிவந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டத்தை அறிந்த தாசிம் இதுகுறித்து, ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் முகமது அஷ்வாக், தனது ஆவணங்களைப் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முகமது அஷ்வாக்கை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளின் ஆவணங்களைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனத்தில் ஏசி வாங்கி அதனை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாரூக் மற்றும் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அஸ்ரார் அகமத் ஆகியோருக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "ஆம்பூரில் முகமது அஷ்வாக் என்பவர் கூலி தொழிலாளிகளின் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் வாங்கிக்கொண்டு ஏழை எளியோருக்கு உதவி செய்வதற்காகப் பொருட்களை வாங்குவதாக நாடகமாடி கடைகளுக்கு சென்று ஏசிகளை வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். கூலித்தொழிலாளிகளின் ஆவணங்களை வைத்து கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் அவர்களைச் சிக்க வைத்துள்ளார். இதனால் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து 1-க்கும் மேற்பட்டோர் புகார்கள் அளித்ததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தோம்" என்றனர்.
இதையும் படிங்க: திருப்பத்தூரை அதிர வைக்கும் ஜிஎஸ்டி மோசடி.. சாமானிய மக்களை குறிவைக்கும் கும்பலின் பின்னணி என்ன?