சென்னை: விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 11:30 மணிக்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங் செல்லும் ஏர் ஏசியா விமானம் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் செல்லும் பயணிகள் அனைவரையும் குடியுரிமை சோதனை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த அற்புத சகாயராஜ் (52) என்பவர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாக அந்த விமானத்தில் செல்வதற்காக வந்திருந்தனர். அவர்கள் குடியுரிமை சோதனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, அற்புத சகாயராஜ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை சென்னை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அற்புத சகாயராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும், கடுமையான மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கனமழை; "எது வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது" - முதல்வர் ஸ்டாலின்!
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து சென்று அற்புத சகாயராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அற்புத சகாயராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் மூன்று பேரின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏர் ஏசியா விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னையில் இருந்து பாங்காக் புறப்பட்டு சென்றது.
குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பயணி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.