திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மனைவி வசந்தா பணகுடி பேரூராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, வசந்தா பணகுடி மெயின் ரோட்டின் சாலையோரம் இருந்த குப்பைகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த சாலை வழியே வேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராவிதமாக வசந்தா மீது மோதியுள்ளது.
அந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, வசந்தா அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வசந்தாவின் கணவர் முத்துக்குட்டி, தங்களின் குடும்பம் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும், தற்போது மனைவியையும், குழந்தையும் வைத்துக் காப்பாற்ற முடியாத அவல நிலையில் தான் இருப்பதாகவும், ஆகையால் என் மனைவியின் வேலையைத் தனக்குக் கொடுத்து, என்னை நிரந்தரப் பணியாளராக மாற்ற வேண்டும் என்றும், என் மனைவிக்குத் தீவிர சிகிச்சை அளித்து அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், விபத்தை ஏற்படுத்திய நபர் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.