சேலம்: சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிசார் பாஷா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிசார் பாஷா களரம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்த கொலை தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போலீசாரின் விசாரணையில், நிசார் பாட்ஷா, அந்த வீட்டில் திருப்பூரைச் சேர்ந்த பிரியா என்பவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பின்னர், கணவரை விட்டு பிரிந்து, அவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து, அவரையும் விட்டு பிரிந்து வந்து, நிசார் பாஷாவுடன் பிரியா குடும்பம் நடத்தி வந்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, தனிப்படை போலீசார், திருப்பூருக்குச் சென்று பிரியா எங்கே இருக்கிறார் என்பது தொடர்பாக அவரது கணவர் மற்றும் காதலனிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதனிடையே அவருடைய செல்போன் டவர் மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில், பிரியாவை தனிப்படை போலீசார் சேலத்தில் நேற்று இரவு கைது செய்துள்ளனர். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்படி, சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பிரியா அடிக்கடி வந்துள்ளார். அப்பொழுது அவருக்கும், நிஷார் பாட்ஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்கள் இருவரும் கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி உள்ளனர். கடைசியாகதான் இவர்கள் களரம்பட்டி பகுதிக்கு குடியேறியுள்ளனர். நிசார் பாட்ஷா, வீட்டுக்கு தினமும் குடித்துவிட்டு வந்து பிரியாவுடன் தகராறு செய்துள்ளார்.
அவரிடம் பாலியல் தொழிலுக்குச் செல்லுமாறும் கூறி தொந்தரவு செய்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று, இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது, பிரியாவை அவர் அடிக்க முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, ஆத்திரத்தில் பிரியா அங்கு கிடந்த அம்மிக்கல்லை எடுத்து நிசார் பாட்ஷாவின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பற்றி எரிந்த காட்டுத்தீ.. பெரியகுளத்தைச் சேர்ந்த 2 விவசாயிகள் கைது!