சென்னை: பரங்கிமலை காவல் நிலையம் பின்புறம் உள்ள ஆலந்தூர் ராஜா தெருவில் காவலர் குடியிருப்பு உள்ளது. இதில் இ- பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் கார்த்திகேயன் என்பவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகறார். இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாயான ஹஸ்கி என்ற நாயை வளர்த்து வருகிறார். இதே வளாகத்தில் பின்புறம் உள்ள பி பிளாக்கில் ஒரு வீட்டில் குடியிருப்பவர் காவலர் வினோதா. இவர் அசோக் நகரில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மாலை 7 மணி அளவில் கார்த்திகேயனின் மகன் தன்னுடைய நாயை பி பிளாக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அங்கே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த வளர்ப்பு நாய், விளையாடிக் கொண்டிருந்த வினோதாவின் அண்ணன் மகன் அஸ்வந்த்தை கடித்துள்ளது.
அப்பொழுது அஷ்வந்த் பயந்து ஓடிய நிலையில், நாய் விடாமல் சிறுவனை துரத்தி துரத்தி கடித்துள்ளது. அதை தடுக்க முயற்சி செய்த சிறுவனின் இடது கையில் நாய் பல இடங்களில் பலமாக கடித்துள்ளது. இதையடுத்து சிறுவன் பயந்து கொண்டு காவலர் குடியிருப்பில் உள்ள மோட்டார் ரூமில் ஒளிந்துள்ளார்.
மேலும், சிறுவன் கீழே விழுந்ததில் கை கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் வந்து சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதை அறிந்த காவலர் வினோதாவின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர், கார்த்திகேயனின் வீட்டுக்குச் சென்று கேட்கும் பொழுது, கார்த்திகேயன் அம்மா நாய் கடித்துவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும், போங்கள் என்று விரட்டியுள்ளார். இதையடுத்து வினோதா பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, காவலர் குடியிருப்பில் எந்த செல்லப் பிராணியும் வளர்க்கக்கூடாது என்று சட்டம் உள்ளது. அந்த நிபந்தனைக்கு கையெழுத்து போட்டு விட்டு தான் நாங்கள் குடியிருப்பில் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த எங்கள் பிள்ளைகளை வேறொரு பிளாக்கில் வளர்க்கும் நாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது.
இது குறித்து நான் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இதேபோல், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு என்னுடைய 7 வயது மகன் இளமாறனை கார்த்திகேயன் பராமரித்து வரும் தெரு நாய் என் மகனை கடித்ததுள்ளது. அப்போதும் அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர். தற்பொழுது பள்ளி விடுமுறைக்கு எங்கள் வீட்டிற்கு வந்துள்ள என் அண்ணனின் மகன் அஸ்வந்தை கார்த்திகேயனின் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் சம்பவம் வேறு பிள்ளைகளுக்கு நடக்கக்கூடாது” என்றார்.
மேலும், இது குறித்து நாய் கடித்த சிறுவனின் பாட்டி வனஜா பேசுகையில், பிள்ளைகள் வெளியே வந்து விளையாடக்கூட முடியாத சூழல் உருவாகியுள்ளது. நாய் உரிமையாளரிடம் சென்று கேட்டால், நாய்க்கு ஊசி போடப்பட்டுள்ளது, எதுவும் ஆகாது என பதில் சொல்கின்றனர். குடியிருப்பில் நாய் வளர்ப்பதை தடுக்க வேண்டும் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.