ஈரோடு: கோயம்புத்தூரிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்தானது சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை புது ரோடு என்ற இடத்தின் வளைவில் திரும்பும் போது, எதிரே அட்டைபாரம் ஏற்றி வந்த சரக்கு லாரி, அரசுப்பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அரசுப்பேருந்தின் பின் இருக்கைகளில் பயணித்த அங்கணகவுண்டன்புதூரைச் சேர்ந்த சதீஷ் என்ற கல்லூரி மாணவர் மீது ஜன்னல் கம்பி பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதனைப்பார்த்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பேருந்தில் காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : உணவு குறித்த புகாரால் விசாரணைக் கைதிக்கு தனிமை சிறையா? - சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
இந்த விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் வலது பக்கவாட்டில் சரக்கு வாகனம் மோதிய வேகத்தில் ஜன்னல் கம்பி இரண்டாக துண்டாகி இருக்கையில் பயணித்த மாணவர் சதீஷ் உடலில் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த மாணவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வந்துள்ளார் என்பதும் இன்று வார விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல அரசுப்பேருந்தில் பயணித்த போது இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்