விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறையினரால், வாறுகால் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல், பேவர் பிளாக் பதித்தல் போன்ற பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதனால் சாத்தூர் நகர் பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சாத்தூர் நகர் பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளன. இந்த நிலையில் நேற்றும் சாத்தூர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததது.
இதனால் சாத்தூர் - மதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடை அருகே 3 பெண்கள் கைக் குழந்தையுடன் சாலையை கடக்க முயன்ற போது, சாலையை அகலப்படுத்தும் பணிகளுக்காக தோண்டி வைக்கப்பட்ட பள்ளத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தவறி விழுந்து உள்ளார்.
இதனைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் பள்ளத்திற்குள் தவறி விழுந்து உள்ளார். இந்த CCTV காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக பள்ளத்தினை மூடி கான்கிரீட் போடப்பட்டுள்ளது.
இந்த மாதிரியான விபத்துகளை தவிர்க்க மழைக் காலங்களில் சாலைகளை அகலப்படுத்தும் பணிக்காக குழிகள் தோண்டப்படும் போது, அந்த இடத்தில் எச்சரிக்கை பலகைகள் இல்லாததே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள் உடனடியாக எச்சரிக்கை பலகையை ஆங்காங்கே வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : கோபிசெட்டிபாளையம் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி! - Erode Stone Quarry Explosion