மதுரை: ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "எங்கள் பகுதியைச் சேர்ந்தவர், கோவிந்தசாமி. இவரின் உறவினர் ஏடிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார்.
கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவி ஆகியோர், தங்களுக்குச் சொந்தமான நிலத்தை 20 வருடங்களுக்கு முன்பு எனக்கு கிரையம் செய்து கொடுத்தனர். அதை அனுபவித்து வந்தேன். இந்த நிலையில், தற்போது அந்த நிலத்தை மீண்டும் தங்களுக்குத் தரும்படி கேட்டனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன்.
இதற்கு இடையே, என்னைப் பழிவாங்கும் நோக்கில், முன்னாள் ஏடிஜிபி தூண்டுதலின் பேரில், காளிராஜ் என்பவர் மூலமாக என் மீது பொய்யான புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி சத்தி குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த உடன், போதுமான காரணங்கள் இல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களை தொந்தரவு செய்யக்கூடாது. குடிமக்களைத் துன்புறுத்தல்களில் இருந்து சட்டம் பாதுகாக்க வேண்டும்.
மேலும், தேவையில்லாமல் யாரையும் தொந்தரவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், போலீசார் மனுதாரருக்கு எந்த தொந்தரவும் அளிக்கக்கூடாது. மனுதாரர் மீதான வழக்கை விசாரிக்கலாம்.
இதுமட்டுமல்லாது, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது. இந்த வழக்கு குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 'மக்கள் பீதி அடைய வேண்டாம்'- தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல் துறை விளக்கம்!