மதுரை: மதுரையைச் சேர்ந்த வைகை நதிகள் மக்கள் இயக்க நிறுவனர் வைகை ராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் வைகை ஆறு உற்பத்தியாகி மதுரை, தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வரை செல்கின்றது. மேலும், இந்த 4 மாவட்ட விவசாயத்திற்கும் வைகை ஆறு பெரிதும் பயன்படுகிறது.
இதுமட்டும் அல்லாது, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வைகை நீர் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள் ஒன்றுக்குப் புற நோயாளிகள் 6 ஆயிரம் பேரும், உள் நோயாளிகளாக 3 ஆயிரத்து 500 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சை செய்ய உயர்தர மருத்துவம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில், மருத்துவமனையில் இருந்து வெளியேறக்கூடிய ரசாயனம் கலந்த மருத்துவ கழிவுநீரை எந்தவிதமான சுத்திகரிப்பும் செய்யாமல் மதுரை மாநகராட்சி, மதுரை மாநகர் ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நேரடியாகக் குழாய் மூலம் கலந்துவிடும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுச்சூழல் மாசடைவதுடன் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய தொற்று நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவ கழிவை மதுரை மாநகராட்சி நேரடியாகக் குழாய் மூலம் வைகை ஆற்றில் கலப்பதைத் தடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், "இந்த வழக்கு குறித்து பொதுப்பணித்துறை செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு; நீலகிரி அதிமுக செயலாளருக்கு முன் ஜாமீன்!