மதுரை: திருச்சியைச் சேர்ந்த தனபாலன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2015ல் கலா என்பவர் தொழில் தொடங்குவதாகக் கூறி திருச்சி துவாக்குடியில் உள்ள கனரா வங்கிக்கிளையை அணுகினார். அதன் அடிப்படையில் அவருக்கு 1.85 கோடி ரூபாய் லோன் வழங்கப்பட்டது.
இந்த கடன் தொடர்பான விவரங்கள் எதையும் என்னிடம் தெரிவிக்காமல் என்னைச் சாட்சியாகக் கையெழுத்திட அவரும், வங்கி ஊழியர்களும் கூறினர். அதன் அடிப்படையில் நானும் கையெழுத்திட்டேன். இதன் பின்னர் அது தொடர்பான விவரங்களை விசாரித்த போது, தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் ஒன்றின் நிறுவனராகத் தன்னை காண்பித்து, கலா வங்கிக் கடன் பெற்றது தெரிய வந்தது.
ஆனால், அந்த நிறுவனம் அவருடையது அல்ல. அவர் போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து வங்கியில் கடன் பெற்று, துவாக்குடி பகுதியில் நிலம் வாங்கியுள்ளார். மேலும், அந்த நிலமும் இதுவரையில் முறையாகப் பத்திரப்பதிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி லோனுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு, அன்றைய தினமே வங்கிக் கணக்கும் தொடங்கப்பட்டு, கடன் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த 2014ல் பாரி என்பவர் கனரா வங்கியில் 11 கோடி ரூபாய்க் கடன் பெற்றுள்ளார். அதற்குச் சாட்சியாக தற்போது கடன் வாங்கிய கலா என்பவர் கையெழுத்திட்டுள்ளார். இவர் பாரியின் மனைவி ஆவர்.
மேலும், கடன் வாங்கி மோசடி செய்வதற்கு ஏதுவாக கலா பெயரில் இரண்டு வருமானவரி எண் (pan card) வெவ்வேறு பிறந்த தேதிகளை வைத்துப் பெற்றுள்ளார். இதுமட்டும் அல்லாது, வங்கிக் கடன் பெற்ற விவகாரம் இவரது CIBIL பதிவில் ஏற வில்லை. ஆனால், சாட்சி கையெழுத்துப் போட்ட எனது பெயரில் உள்ள PAN மற்றும் CIBIL பதிவில் இரண்டு கோடி கடன் வாங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம் விசாரணைக்கு வந்த போது, கனரா வங்கி தரப்பில் மோசடி ஏதும் நடைபெறவில்லை என மோசடி செய்தவர்களுக்குச் சாதகமாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது என தெரியவருகிறது. ஆகவே, எனது புகார் தொடர்பாக சிபிஐ விசாரித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கனரா வங்கியில் நடைபெற்ற முறைகேடு குறித்து வங்கியின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வங்கியையும் எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி சிபிஐ தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையில் கனரா வங்கியை எதிர் மனுதாரராகச் சேர்ப்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: லைகா Vs சவுக்கு சங்கர்; அவதூறு கருத்து தெரிவிக்க விதித்த இடைக்காலத் தடை நீட்டிப்பு!