சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு 12 வயதில் திவாகர் என்ற மகனும் மற்றும் ஆறு மாத குழந்தையும் உள்ளனர். இதில், மகன் திவாகர் கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், பாபு தனது 6 மாத குழந்தைக்காக வீட்டில் புடவையில் ஊஞ்சல் கட்டி இருக்கிறார். அந்த ஊஞ்சலில் சிறுவன் திவாகரும் தினந்தோறும் விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று திவாகர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்க, பெற்றோர் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் திவாகர் விளையாடிக் கொண்டிருந்த ஊஞ்சல் புடவை, அவரது கழுத்தில் இறுக்கி சுற்றிக் கொண்டுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, சிறுவனின் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே பெற்றோர் சிறுவனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக கொருக்குபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி விஷவாயு விவகாரம்; மூன்று பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு