திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் பகுதியில் சௌந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டம் கீழ வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள கொக்கிரகுளம் பகுதியில் சுமார் 4 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் இந்தக் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட நிலம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், சௌந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோயிலுக்குப் பாத்தியப்பட்ட 4 ஏக்கர் நிலத்தில் 78 சென்ட் நிலத்தினைப் பாலையா என்னும் தனிநபர் பயன்படுத்தி வந்ததாகவும் அதற்கான பணத்தையும் கோயில் நிர்வாகத்திற்குச் செலுத்தாமல் காலதாமதப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், நிலத்தை உபயோகிப்பதற்கான பணத்தைச் செலுத்தக் கோரி கோயில் நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட பாலையாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அதற்குப் பாலையா தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடைக்கப் பெறாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோயில் நிர்வாகத்திற்குப் பாலையா கொடுக்க வேண்டிய நிலுவைப் பணம் ரூ.4 லட்சத்திற்கும் மேல் அதிகரித்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் பிரிவு 78 மற்றும் 79-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நீதிமன்றம் நிலத்தினைச் சுவாதீனம் செய்து கொள்ள உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தினை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் இன்று (பிப்.27) கையகப்படுத்தினர்.
இதுமட்டும் அல்லாது, சம்பந்தப்பட்ட நிலத்தினைச் சுற்றி வேலி அமைத்து சீல் வைத்து அதற்கான உத்தரவு நகலையும் விளம்பரப் பதாகையாக அந்த இடத்தில் வைத்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய் 7 கோடியே 80 லட்சம் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலீட்டில் மோசடி.. தூரத்து உறவினராக அறிமுகமாகி பல கோடி ரூபாய் ஏமாற்றிய நபர் மீது புகார்!