சென்னை: பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மணிவேல் தீயப்பழக்க வழக்கங்களுக்கு ஆளானதாகவும், அவரால் குடும்பத்தை நடத்த முடியவில்லை எனக் கூறி, அவரைப் பிரிந்து தன் பிள்ளைகளுடன் திருவல்லிக்கேணி அருகே உள்ள பார்டர் தோட்டம் பகுதியில் அவரது மனைவி நாகவள்ளி வசித்து வருகிறார்.
இவர்களது மகன் போதைக்கு அடிமையாகி, மறுவாழ்வு மையத்திற்கு சென்று திரும்பிய பிறகும் மீண்டும் போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிவேல் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மனைவி வசிக்கும் வீட்டிற்குச் சென்று மனைவியின் அடிவயிற்றில் கத்தியால் குத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தியதுடன், கொலை செய்வதாக மிரட்டியும் உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாகவள்ளி அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், மணிவேல் மீது அண்ணா சாலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை சென்ட்ரல் அருகே அல்லிக்குளம் வணிக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன்பு நேற்று (பிப்.22) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜராகி வாதிட்டார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனைவியைத் தாக்கியது தொடர்பான குற்றச்சாட்டு காவல்துறையால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, மணிவேலுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையில் 4 ஆயிரம் ரூபாயை தாக்குதலுக்கு உள்ளான நாகவள்ளிக்கு வழங்கவும் நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "காடு என்றால் காடுதான்"-கொட்டு வைத்த உச்சநீதிமன்றம்: 1996ல் நீலகிரி வழக்கில் நடந்தது என்ன?