சென்னை: தமிழ்நாட்டில் 15 வயதிற்கும் மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்குவதற்கு 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்'( New India Literacy Programme) கடந்த 2022-23 ம் ஆண்டில் முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் எழுத்தறிவு இல்லாத 16 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
2025-26 ம் ஆண்டிற்குள் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-25ம் ஆண்டில் எழுதப் படிக்கத் தெரியாதோர் அனைவரையும் 100 சதவீதம் கண்டறிய விரிவான கணக்கெடுப்பு பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்பட்டது.
அதன்படி 6 லட்சத்து 14 ஆயிரம் பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு கற்பிக்க அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி வளாகங்களில் 30, 113 இடங்களில் கற்போர் எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டு, 30, 113 தன்னார்வலர்களின் உதவியுடன் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் 2024 ஜூலை மாதம் முதல் நடைபெற்றது. இதில் வயதானவர்களுக்கும் அடிப்படை எழுத்தறிவு சாெல்லித்தரப்பட்டது.
இதையும் படிங்க: 19 ஆயிரம் புதிய ஆசிரியர்களை கொண்டு வர முடிவு... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
5.94 லட்சம் பேர் எழுதினர்: இந்த நிலையில் தாத்தா, பாட்டி உள்ளிட்ட 15 வயதிற்கு மேற்பட்டு படித்தவர்கள் அடிப்படை எழுத்தறிவில் எந்தளவிற்கு கற்றுக் கொண்டுள்ளனர், என்பதை சோதனை செய்வதற்கு 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டது. இந்த தேர்வினை எழுத 5 லட்சத்து 9 ஆயிரத்து 459 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வினை ஆர்வமுடன் எழுதி உள்ளனர். குறிப்பாக சென்னை மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரம் பேர் தேர்வினை எழுதி உள்ளனர் என பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குநர் நாகராஜமுருகன் தெரிவித்துள்ளார்.