சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தாய் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளுள் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த, சுமார் 30 வயதுடைய ஆண் பயணி. இரண்டு பெரிய அட்டை பெட்டிகளுடன் விமானத்தில் இருந்து கன்வேயர் பெல்டில் வந்த அட்டைப் பெட்டிகளை எடுத்துக்கொண்டார். பின் விமான சுங்கத்துறை அதிகாரிகளிடம் தான் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் கொண்டு வரவில்லை எனக் கூறி கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார்.
அப்போது அவர் மீது சந்தேகமடைந்த சென்னை விமான நிலைய சுங்கதுறை அதிகாரிகள் அவரை நிறுத்தி இரண்டு அட்டைப்பெட்டிகளிலும் என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு அந்த பயணி குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், மற்றும் சாக்லேட், பிஸ்கட்கள் இருக்கின்றன என்று கூறினார். அதன் பின் சோதனையில் இறங்கிய சுங்க அதிகாரிகள் இரண்டு அட்டைப் பெட்டிகளையும் திறந்து பார்த்தனர்.
அப்போது அதில் நிறங்களை மாற்றிக் கொள்ளும் தன்மையுடைய (Baby Iguana) எனப்படும் 402 ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மத்திய வன உயிரின காப்பகம் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விமான நிலையத்திற்கு வந்த அதிகாரிகள் பச்சோந்திகளை ஆய்வு செய்தனர்.
அதில், 402 பச்சோந்திகள் இருந்த நிலையில் 67 பச்சோந்திகள் அட்டைப்பட்டிக்குள் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தன. பின்னர் ஆய்வில் இந்த பச்சோந்திகள் முறையான ஆவணங்கள் இல்லாமல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
மேலும், இந்த பச்சோந்திகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால் வெளிநாட்டு நோய்க்கிருமிகள் இங்கு பரவி விலங்குகள், பறவைகள், மற்றும் மனித உயிரினம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது எனத் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் உயிருடன் இருந்த 335 பச்சோந்திகளை இன்று காலை தாய்லாந்து விமான மூலம் திருப்பி அனுப்பினர். பின் சட்ட விரோதமாக இந்த பச்சோந்திகளை கடத்தி வந்தவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் தாய் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் சடலமாக மீட்பு - கணவரிடம் விசாரணை! -