சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஜிமோன்(32). இவர் துபாயில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், துபாயில் உள்ள இவரது நண்பர்களான பென்னி, மாலிக் இருவரும், ஷாஜிமோனிடம் "நான் கொடுக்கும் பொருளை சென்னையில் உள்ள சில நபர்களிடம் கொண்டுபோய் ஒப்படைத்தால் அவர்கள் உனக்கு அதிகப் பணம் தருவார்கள்" என ஆசை வார்த்தைக் கூறியுள்ளார்.
அதை நம்பிய ஷாஜிமோன் ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவரும் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் அடங்கிய பொட்டலத்தைக் கொடுத்து, அதை விமானம் மூலம் சென்னைக்கு கடத்திச் செல்ல வேண்டும் எனவும், பின்னர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ள தங்களது கூட்டாளிகளிடம் தங்கத்தைக் கொடுத்தால், அவர்கள் ரூ.5 லட்சம் கூலியாக உனக்குத் தருவார்கள் எனவும் கூறியுள்ளனர்.
தங்கம் கடத்தி வந்தவரை கடத்திய கும்பல்: பின்னர், அவரது ஆசன வாயிலில் தங்கத்தை வைத்து, சென்னைக்கு விமானம் மூலம் மாலிக் அனுப்பி வைத்துள்ளார். மறுநாள் (ஏப்.31) சென்னை வந்திறங்கிய ஷாஜிமோனியும், சுங்க சோதனையில் சிக்காமல் வெளியே வந்துள்ளார். ஆனால், தங்கத்தைக் கொடுக்காமல் ஷாஜிமோன் ஏமாற்றியதாக தெரிகிறது. அதனால், ஆத்திரமடைந்த கடத்தல் கும்பல், ஷாஜிமோனை கடத்திச் சென்று திருவல்லிக்கேணி மியான் சாகிப் தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத்து, தங்கத்தை கேட்டுக் கடந்த 4 மாதங்களாகச் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தனியார் விடுதியின் உரிமையாளரான இம்ரான்(28) என்பவருக்கும் இதில் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், இம்ரான் ஷாஜியை விடுதியை சுத்தம் செய்யுமாறும் துன்புறுத்தியுள்ளார். அப்படி, விடுதி அறை ஒன்றை சுத்தம் செய்யும் போது, வாடிக்கையாளர் ஒருவரின் உதவியுடன் ஷாஜிமோன் இந்த சித்ரவதை குறித்து தனது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் பேரில் உறவினர் உடனடியாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட ஷாஜிமோனை நேற்று (ஆக.30) பத்திரமாக மீட்டுள்ளனர்.
4 பேர் கைது: பின்னர் அவரை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர்கள் அண்ணாசாலை பார்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த முகமது அலீம்(19), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஹசீல்பயாஸ்(23), ஒரிசாவைச் சேர்ந்த பரேந்தர்தாஸ்(40) மற்றும் மதுரையைச் சேர்ந்த கோபி கண்ணன்(36) என்பது தெரிய வந்தது.
மேலும், இவர்கள் அனைவரும் சேர்ந்து வெளிநாட்டிலிருந்து தங்கத்தைக் கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும், அப்போது துபாயில் உள்ள மாலிக் மூலம் தங்க முட்டையை ஷாஜிமோன் கடத்தி வந்ததும், பின்னர் தங்கத்தைத் தராமல் ஏமாற்றியதால் அவரை கடத்திச் சென்று சித்ரவதை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் விடுதி உரிமையாளர் இம்ரானை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை.. விமான சேவைகள் கடும் பாதிப்பு!