சென்னை: சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அப்படிப்பட்ட கனவுகளோடு வருபவர்களைக் குறிவைத்து, அவ்வபோது சில மோசடி சம்பவங்களும், ஏமாற்றும் வேலைகளும் நடைபெறுகின்றன. இந்தநிலையில் சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம், சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறி 25 லட்சம் மோசடி செய்ததாகப் புகார் பெறப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேடு இளங்கோ அடிகளார் தெருவை சேர்ந்தவர் சேது. இவர் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆண்டு அக்டோபர் மாதம் சேதுக்கு தனது நண்பர் மூலம் விருகம்பாக்கம் ரத்தினம் நகரை சேர்ந்த சினிமா இயக்குநர் லால் பகதூர் என்பவரது அறிமுகம் கிடைத்ததுள்ளது.
அப்போது இயக்குநர் லால்பகதூர் துணை நடிகர் சேதுவிடம் உங்களை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சினிமா தயாரிக்க உங்களின் பங்காக 25 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி சேது சினிமாவில் தானும் ஹீரோவாக நடிக்கப் போகிறோம் என்ற ஆசையில் 25 லட்ச ரூபாயை லால்பகதூரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட லால்பகதூர் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை படம் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த துணை நடிகர் சேது தான் கொடுத்த பணத்தைத் திருப்பி தருமாறு லால்பகதூரிடம் கேட்ட போது பணம் தரமறுத்ததுடன் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து துணை நடிகரான சேது, நேற்று இது குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: TNPL-ல் வாய்ப்பு கிடைக்கவில்லை.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!