கோயம்புத்தூர்: கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22வது சர்வதேச வேளாண் கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
வழக்கமாக நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு ஐந்து நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வேளாண் விவசாயப் பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இதில், பல்வேறு பொருட்கள் விற்பனையும் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் நிறுவனங்களும், மலேசியா, சிங்கப்பூர், சீனா, தென்கொரியா உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் அவர்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த காங்கேயம் உள்ளிட்ட நாட்டு மாடுகளும், வெளிநாட்டு வகை ஆடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இதில் பல்வேறு காய்கனி விதைகள், இயற்கை குளிரூட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தோட்டக்கலை சார்பில் நர்சரிகளும் அமைக்கப்பட்டு பல்வேறு ரக செடிகள், பூச்செடிகள் ஆகியவை விற்பனை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் பெருந்துறையைச் சேர்ந்த மொபிடெக் (Mobitech) என்ற நிறுவனம், AI (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சொட்டு நீர் பாசனம் செய்கின்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து அந்த நிறுவனம் சார்பில் கூறுகையில், “AI தொழில் நுட்பத்தைக் கொண்டும், செல்போன் செயலியைக் கொண்டும் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சிக் கொள்ளலாம். இந்த தொழில்நுட்பம் செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இது விவசாயிகளுக்கு உதவியாய் இருக்கும்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியின் வெற்றி ரகசியம் இதுதான்.. தருமபுரியில் முதலமைச்சர் பேச்சு!