கடலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி, உள்ளிட்ட 7 உட்கோட்டங்களில் சோதனை செய்து கடந்த இரண்டு தினங்களில் 204 லிட்டர் சாராயம் 500க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து 119 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.இந்த விவகாரத்தில், இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து சாராய விற்பனை மற்றும் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை கடத்துபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கள்ளச்சாராயம் மற்றும் மது கடத்தல், மது விற்பனை செய்பவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.