சென்னை: ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு சொந்தமாக பூவிருந்தவல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காலி மனையை, நிலத்தை வரன்முறைப்படுத்த பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் நில உரிமம்(பட்டா) வழங்க வேண்டுமென்றால், ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க மனமில்லாத இளையராஜா, ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் இளையராஜாவிடம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
அதையடுத்து, பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலத்தில் இருந்த அலுவலக அதிகாரி தியாகராஜன்(48), ரசாயனம் தடவிய நோட்டுகளை இளையராஜாவிடமிருந்து பெறும் போது, மறைந்து காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும்களவுமாக பிடித்துள்ளனர். மேலும், அலுவலக அதிகாரிக்கு லஞ்சம் வாங்க உதவியாக இருந்த ஊழியர் கிரிதரன்(48) என்ற நபரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நில (பட்டா) உரிமம் கொடுக்க லஞ்சம் பெற்ற விவகாரத்தில், 2 நபரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.