தஞ்சாவூர்: மன்னார்குடியில் உள்ள கல்லூரில் ஒன்றில் முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவி(17), மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவன்(17), உறவினர்களான இருவரும் நேற்று(புதன்கிழமை) நண்பகல் கும்பகோணத்திற்கு வந்துள்ளனர்.
கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய சிறிது நேரத்திலேயே, மாணவன் அறையிலிருந்து ஓடி வந்து, தங்கும் விடுதி ஊழியர்களிடம் தன்னுடன் வந்த பெண்ணிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல உதவுங்கள் என கூறியுள்ளார்.
பின்னர், தங்கும் விடுதியிலிருந்த ஊழியர்கள், அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு, அந்தப் பெண்ணை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
பின்னர், அங்குச் சென்ற போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு அந்தப் பெண், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், தஞ்சாவூர் மாவட்ட தடய அறிவியல் துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் தங்கும் விடுதி மற்றும் இறந்த பெண்ணின் உடலில் உள்ள தடயங்களைச் சேகரித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் நேரில் ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளார்.
முதற்கட்டத் தகவல்: கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் இறந்த பெண்ணின் உடன் தங்கியிருந்த மாணவனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், " நாங்கள் இருவரும் கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டு, கும்பகோணத்திற்கு வந்தோம், அப்போது அந்த பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டதால், குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக் கொள்ள அறை எடுத்துத் தங்கினோம்" என மாணவன் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், உடற்கூராய்வு முடிவுக்குப் பின்னரே பெண்ணின் மரணத்திற்குக் காரணம் என்ன என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கட்டிலுக்கு அடியில் 22 ஆயுதங்கள் பறிமுதல்.. கும்பகோணத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி பிடிபட்டது எப்படி?