சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா செம்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கும் இவ்விழாவில், பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி, அணுசக்தி கழகம் முன்னாள் தலைவர் பத்ம விபூஷன் அனில் ககோட்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, அக்டோபர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு ஆளுநர் அனுமதி அளித்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
சென்னை பல்கலைக்கழகத்தில் சுமார் 13 மாதமாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் உள்ளதால், பட்டமளிப்பு விழா நடைபெறுவதற்குள் துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்றும் துணைவேந்தர் அல்லாமல் வேறு ஒருவரின் கையெழுத்தோடு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கினால் அது செல்லாது என்பதை வலியுறுத்தியும் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நேற்று ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டாத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஆளுநர் கையெழுத்துடன் சான்றிதழா, துணைவேந்தர் நியமிக்காமல் பட்டமளிப்பு விழாவா? சென்னைப் பல்கலை பணியாளர்கள் போர்க்கொடி!
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் வரும் 24ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் அதற்கு ஒப்புதல் பெறவும், பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு சிக்கல்களை ஆராயவும் உயர் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் முன்னிலையில் சென்னை பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், வரும் 24 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடத்தலாம் என்று அனைவரும் ஒப்புதல் கொடுத்துள்ளனர். மேலும், துணைவேந்தரின் கையொப்பம் இல்லாமல் மாற்று நபரின் கையொப்பம் மூலம் பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கினால் அது உயர்கல்வியிலும், பணியிடத்திலும் செல்லுபடியாகுமா? என்பது குறித்து சட்டத்துறையிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
சட்டத்துறை கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில், வேந்தர் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுசென்று முடிவெடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து வருகிற 24ஆம் தேதிக்குள்ளாக செனட் கூட்டத்தை நடத்தி ஒப்புதல் பெற வேண்டிய நிலை இருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா செம்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது என சென்னை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் சுமார் 55 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.