சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (மார்ச் 4) பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வி எழுதும் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கியும், வாழ்த்துக்களை தெரிவித்தும் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை: பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 3 லட்சத்து 89 ஆயிரத்து736 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 741 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களின் எண்ணிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 302 மையங்களில் இன்று தெரு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை கண்காணிக்கும் பணியில், அரை கண்காணிப்பாளர்களாக 46 ஆயிரத்து 700 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பறக்கும் படை மற்றும் நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறைவாசிகளில் வசதிக்காக சிறைகளிலும் தேர் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் தேர்வு: சென்னையில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852 மாணவ, மாணவிகள், 240 மையங்களில் இன்று தேர்வினை எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்கும் பணியில், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என மொத்தம் 4465 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள்: தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், இருக்கை, காற்றோட்டம், வெளிச்சம் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
தேர்வு எழுத வந்த மாணவர்களை, ஆசிரியர்கள் சோதனை செய்த பின்னர் தேர்வு அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வு காலை 10:15 மணிக்கு தொடங்கி 1:15 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி, மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டு, அவற்றை படிப்பதற்கு பத்து நிமிடமும், விடைத்தாள் வழங்கி அதில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, கையொப்பமிட 5 நிமிடம் வழங்கப்பட்டது.
மேலும், தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீரப்பதற்கு, தேர்வு துறை இயக்குனர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, காலை 10:15 தொடங்கிய தேர்வினை மாணவ, மாணவிகள் அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி நல்ல முறையில் எழுதி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'திமுகவால் மத்தியில் ஆட்சி மாற்றம்..நரேந்திர மோடி சிறைக்கு செல்வது உறுதி' - ஆ.ராசா பரபரப்பு பேச்சு