ராணிப்பேட்டை: சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(35), கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மோகனப்பிரியா(30) என்ற மனைவியும், யாஷிகா என்ற மூன்று வயது மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் ஆற்காட்டில் உள்ள மோகனப்பிரியாவின் தயார் ஊரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள திருவிழாவில் பங்கேற்பதாக வீட்டில் இருந்த 6 சவரன் நகை மற்றும் வெள்ளி கால் கொலுசு உள்ளிட்ட பொருள்களை எடுத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
வாகனத்தை ரஞ்சித்குமார் ஓட்டிக்கொண்டு சென்றுள்ளார். மாந்தாங்கல் அடுத்த சமத்துவபுரம் அருகே வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரஞ்சித்குமார், மோகனப்பிரியா மற்றும் அவர்களது குழந்தை ஆகிய மூவருக்கும் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், மயக்கம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரசாந்த், மற்றும் மருத்துவ உதவியாளர் கிரிஜா ஆகியோர், மோகனப்பிரியா வைத்திருந்த தங்க நகைகளை விபத்து நடந்திடத்திலிருந்து பத்திரமாக மீட்டதோடு அதனை மருத்துவமனை செவிலியரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மோகன பிரியாவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மீட்டு மருத்துமனையில் அனுமதித்தது மட்டும் அல்லாமல், அவர்களது நகையைப் பத்திரமாக மீட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி ஆசிரியர்களின் ஐடி தாக்கலில் ரூ.1.5 கோடி மோசடி? கோவில்பட்டி பள்ளியில் நடப்பது என்ன?